இந்த ஆள் எப்போ முடிப்பார்னு தெரியலை. தினம் இந்த மாதிரிதான் ஆயிடறது. ஒவ்வொருநாளும் கொஞ்சம் முன்னாலே வந்து பேப்பரை முழுக்கப் பாத்துட்டுப் போகலாம்னா நாம வரத்துக்குள்ளே நாலு பேராவது ஏற்கனவே வந்துடறாங்க. இவங்க வீடெல்லாம் பக்கத்திலேயே இருக்கோ என்னவோ. இந்த ஆள் வீடு ரொம்பப் பக்கத்திலே இருக்கணும். ரொம்ப ரொம்பப் பக்கத்திலே இருக்கணும். இந்தச் சாலையிலே இரண்டு சாரிலேயும் ஒரே பாங்குகளும் கடைகளுந்தான் இருக்கு . இந்தப் பாங்குகளையும் கடைகளையும் எட்டு மணிக்குத்தான் திறக்கிறான். இந்த ஒரு இடந்தான் ஏழு மணிக்கே திறக்கிறான். ஏழு மணிக்கே வந்தா இங்கே வர இரண்டு மூணு பேப்பரையும் அஞ்சு நிமிஷத்துலே பாத்துட்டுப் போயிடலாம். நாளைக்காவது ஏழுமணிக்கு வந்துடணும். ஏழு மணிக்கு வந்தா வீட்டிலே தண்ணி பிடிச்சு வைக்க முடியாது. எட்டு குடும்பம் நடுவிலே ஒண்டுக் குடித்தனம் வாழற அழகிலே ஒழுங்காக் கொல்லைப்புறம் போயிட்டு வரமுடியாது. ஏழு மணிக்குள்ளே பழைய சோத்தைக் கொட்டிண்டு கிளம்ப முடியாது. பேப்பரைப் படிச்சுட்டு மறுபடியும் வீட்டுக்குப் போய் குளிச்சிட்டுச் சாப்பிட்டுட்டு கிளம்பறதுக்கு நேரம் இருக்காது. வெறும் வயத்தோட ஒன்பதே முக்கால் மணி வரை எப்படி இருக்கிறது ? ஒன்பதே முக்காலுக்குத்தான் காண்டானுக்குள்ளேயே நுழையலாம். இந்தப் பேப்பரையே படிக்காம போயிடலாம். பேப்பரைப் படிக்காம போற நாளிலேதான் சர்க்கரைகார்டு பத்தி ஏதாவது புதிதாச் சொல்லறான். நாலு நாளைக்கு பால் கார்டு தர மாட்டேன்னு சொல்லறான். இது தெரியாம அரைநாள் லீவு போட்டுட்டுப் பால் ஆபீஸஉக்குப்போனா, 'போங்க திங்கக்கிழமை வாங்க, படிச்சவங்களெல்லாம் இப்படி வந்துடறீங்களே ? பேப்பர்லதான் போட்டாங்களே ? ' அப்படான்னு பால் ஆபீஸ் பியூன் கேக்கறான். பேப்பரை வீட்டிலேயே வாங்கித் தொலைக்கலாம். முழுக்க அஞ்சு நிமிஷங்கூடப் படிக்கிறதுக்கு விஷயம் இல்லாத பேப்பரை
மாசம் எட்டு ஒம்பது ரூபா கொடுத்து அழ வேண்டியிருக்கு. ஒம்பது ரூபாயிலே எவ்வளவோ காரியம் நடக்கும். ஆனா இந்த நாள்லே ஒம்பது ரூபாலே என்ன காரியம் நடக்கிறது ? ஒழுங்கா இரண்டு படி அரிசி வாங்கிண்டு வர முடியலை. இரண்டுபடி அரிசி இரண்டு நாள்லே தீந்துபோயிடறது. நாள் கணக்கிலே கிரஸினாயிலே கிடைக்காம போய் அன்னிக்கு வாசல்லே வந்த வண்டிக்காரன் கிட்டே இருந்த காசெல்லாம் கொடுத்து மூணு பாட்டில் எண்ணை வாங்கித்து. அளவெல்லாம் மோசம். சொன்னா அதுவும் இல்லைன்னு அடிச்சுடறான். அன்னிக்கு அந்த அஞ்சு ரூபா நோட்டை வாங்கிக்க மாட்டேன்னு அழ அழ வைச்சான். போஸ்டாபீஸ்லே கொடுத்த நோட்டு. போஸ்டாபீஸ். அவனும் சில்லறை இல்லைன்னு நாயா அங்கேயும் இங்கேயும் ஓட வைச்சு அப்புறம் கொடுத்த நோட்டு. கையை விட்டா அப்படியே பறந்து போயிடும். அது காசுன்னு இல்லைன்னா அந்தக் குப்பையை எவனும் கோலெட்டுக்கூடத் தொடமாட்டான். ஆனா இப்பத் தெருவிலே இருக்கிற காகிதக் குப்பையைச் சின்னத் துண்டு விடாம தூக்கிண்டு போறாங்க. இந்தக் காகிதம் பொறுக்கிறவங்க கண்ணே ஏதோ மாதிரி மாறிடறது. அவனுக்கு உலகத்திலே வேறே எந்தச் சிந்தனையும் கிடையாது. அவன் தோளிலே இருக்கிற சல்லடையா இருக்கிற சாக்கு, அப்புறம் குப்பை. தெருவிலே போறவங்க, வரவங்க, வண்டி, சைகிள், மாடு, வீடு எதுவும் அவன் கண்ணிலே படறதும் கிடையாது. படவும் முடியாது. கண்ணிலே படறது இல்லேன்னு சொல்ல முடியாது. அப்படி இல்லேன்னா தினம் ரோடிலே கார் ஏறிச் சாகறவங்க எல்லாரும் இந்தக் குப்பை பொறுக்கிறவங்களாத்தான் இருக்கணும். ஒரு வேளை அப்படித்தானோ என்னவோ. குப்பை பொறுக்கிறவங்க இவ்வளவு பேர் செத்தும் இன்னும் குப்பை பொறுக்கிறவங்க இவ்வளவு பேர் இருக்காங்கன்னா இந்த ஊர்லே குப்பை பொறுக்கிற வேலைதான் எவனுக்கும் உடனே கிடைக்கக்கூடியதுன்னு குழந்தைகூடத் தெரிஞ்சுகும். எவ்வளவு நல்லகாலம் இந்தக்குப்பை பொறுக்கறவங்க அத்தனைபேரும் திருடப்போகாம, கொள்ளையடிக்க போகாம இருக்கிறது ' நாளெல்லாம் குப்பை பொறுக்கினா அதிலே எவ்வளவு கிடைக்கும் ? ஒரு ரூபாய்--இரண்டு ? இரண்டு ரூபாலே ஒத்தன் என்ன பண்ண முடியும் இந்தக் காலத்திலே ? அது சரி, அவனே இரண்டு ரூபாய்க்கு வாங்கித் தின்னுட்டான்னா அவன் குழந்தை குட்டிங்க ? அவனுக்கு மட்டும் குழந்தை குட்டி கிடையாதா ? வீடு வாசல் துணி இல்லாம இருக்கலாம், குழந்தை குட்டி இருக்காது ? அந்தக் குழந்தைக் குட்டிகளும் இவன் மாதிரித்தான் குப்பை பொறுக்க போயிடுமோ ? குப்பைன்னா என்ன குப்பை ? தெருவிலே கிடக்கிற பாதிக்குப்பை குழந்தைப்பீயை வழிச்சுப் போட்ட குப்பைத்தானே ? அந்தப்பீயைத்தான் அந்தக் குழந்தைகளும் தோள்மேல் சுமந்துண்டு போகும் ? பீயைச் சுமக்கிறதுக்கா இங்கே குழந்தை குட்டிங்க பொறக்கிறாங்க ? பீ. பீ. பீ. எல்லாம் ஒரே பீ, இந்த ஆளு விடாம ஒரு வரி விடாம படிக்கிற இந்தக் காகிதம் கூட நாளைக்குப் பீயோட தெருவிலே கிடக்கும். அதை ஒத்தன் பீன்னுகூடப் பாக்காம சாக்கிலே எடுத்துப் போட்டுண்டு இன்னும் பீக் காகிதத்தைப் பொறுக்கப் போயிண்டே இருப்பான்.......
அந்தக் கிழவர் படித்துக்கொண்டிருந்த தாளை அவனும் ஒரு முனையில் தூக்கிப் பிடித்தான்.
இந்தப் பக்கத்தை இந்த ஆளு அஞ்சு நிமிஷமாப் படிச்சுண்டிருக்கார். படிச்சுண்டிருக்கார் என்ன வேண்டியிருக்கு ' கான். குனிஞ்ச தலைநிமிராமப் படிச்சுண்டிருக்கான். இந்த ரீடிங் ரூமிலே வேறே பேப்பரும் கிடையாது. இது தர்மத்துக்கு நடத்தற ரீடிங் ரூம். அவன்தான் எவ்வளவு பேப்பர் வாங்கி போடுவான் ? பிராஞ்சு லைப்ரரியை எட்டரை மணிக்குத்தான் திறக்கிறான். இந்த கால்காசு வேலைகூட இல்லேன்னா அங்கே போய்ப் படிக்கலாம். அதுவே வேலை இல்லாதவர்களுக்குத்தான் நடத்தறானோ என்னவோ. இது எட்டரை மணிவரை ரீடிங் ரூம். அப்புறம் கிண்டர் கார்டன் ஸ்கூல். சுவரிலே ஒரு ஆணி விடாம படம். இல்லாதபோனா போதனைகள். அன்பே சிவம். உழைப்பே தெய்வம். சுத்தம் சோறு போடும். உண்மையே பேசு. சத்தம் போடாதே. சத்தம் போடாமதான் இந்தக்கதிக்கு வந்தாச்சு. இந்த ஆளு சத்தம் போடாமதான் படிச்சுண்டு இருக்கான். படிச்சுண்டே இருக்கான். நானும் காத்திண்டே இருக்கேன். இவன் படிக்கிற பக்கத்திலே பாதிலே ஒரு பாங்க் பாலன்ஸ் ஷீட். ஒரு எண்கூட எட்டு இலக்கத்துக்குக் குறைஞ்சு கிடையாது. எட்டு, ஒன்பது, பத்து, பதினொண்ணு கூட இருக்காப்போல இருக்கு. பதினொரு இலக்கத்து எண்ணை ரூபாயாக் கற்பனை பண்ணிக்கூடப் பாக்க முடியலை. இதுவே பட்ஜெட் தாளாக்கூட இருக்கலாம். அப்பவும் பத்து, பதிணொண்ணு, பன்னெண்டுன்னு பெரிய பெரிய எண்கள். அவன் பத்து இலக்கத்துலே போட்டாலும் ஒண்ணுதான். இருபது இலக்கத்துலே போட்டாலும் ஒண்ணுதான். இவ்வளவு ரூபாயைப்பத்தி நிஜமாத் தெரிஞ்சவங்க நிச்சயம் இருப்பாங்க. அவங்க எப்படி இருப்பாங்க ? என் மாதிரி இருக்கமாட்டாங்க. இந்த ஆள் மாதிரி கூட இருக்கமாட்டாங்க. இலவசப்பேப்பர் பறக்கப் பறக்கப் படிச்சுட்டுப் போறவங்களுக்கு மூணு இலக்க எண் தெரிஞ்சாலே பெரிய விஷயம். அது பிச்சைக் காசு பிச்சைக்காரங்களுக்குப் பிச்சைக்காசு பத்தித்தான் தெரியும். லட்சம் கோடியெல்லாம் பள்ளிக்கூடத்திலே பரீட்சை பாஸ் பண்ணற அளவுக்குத் தெரிஞ்சாப் போதும். அவ்வளவுதான் தெரியும் வேறே. இந்த ஆளு எவ்வளவு பரீட்சை பாஸ் பண்ணியிருப்பான் ? அதிகமா இருக்காது. இவன் ஷவரம் பண்ணி அஞ்சாறு நாளாகியிருக்கும். மூஞ்சி தலையிலே இருக்கிற மயிர்லே கருப்பு மயிரை எண்ணி எடுக்கலாம். ஒண்ணு, இரண்டு, மூணு, நாலு.... சீ, மயிரை எண்ணறதுக்கா இங்கே வந்து உக்காரணும் ? ஆனா என்னதான் பண்ணறது ? பேப்பர்லே இருக்கிற மூணுதாளும் மூணு ஆளுங்க கிட்டே சிக்கியிருக்கு. அந்த இரண்டையும் நான் பார்க்கக்கூட வேண்டியதில்லை. எனக்கு ஸ்போர்ட்ஸ்உம் வேண்டியதில்லை, சினிமாவும் வேண்டியதில்லை, பால கிருஷ்ண சாஸ்திரியின் காலஷேபச் சுருக்கமும் வேண்டியதில்லை. இந்த ஆளு பக்கத்தைப் புரட்டினாலும் தேவலை. பாங்க் பாலன்ஸ் ஷீட்டை ஒரு வரி, ஒரு எண் விடாம படிக்கிறான். இவனே பாங்க்லே இருக்கானோ ? இந்த நாள்லே பாங்க்கிலே வேலை பாக்கிறவங்க பளபளன்னுதானே இருக்கிறாங்க ? நிஜமா அவங்ககிட்டே போய் என் அஞ்சு ரூபா, பத்து ரூபாயை சேவிங்க்ஸ் கணக்கிலே போடுன்னு சொல்லறதுக்கே வெக்கமாயிருக்கு அந்தக் கணக்கிலேந்து நான் பத்து ரூபா வாங்கப் போனப்போ அரைமணி காஷ் கெளண்டர்லே காத்திருக்க வேண்டியிருந்தது. ஏன்னா பக்கத்திலே ஜெனரேட்டர் வைச்சு வெளிச்சம் போடற புடவைக் கடைக்காரன் கத்தை கத்தையா நோட்டைக் கொண்டுவந்து பாங்க்கிலே போட்டிருக்கான். அதை அரை மணியா அந்த பளபளா பாங்க் ஆளு எண்ணிண்டிருந்தான். தினம் ஒரு லட்சம் கொண்டு வந்து கட்டறானாம் அந்தக் கடைக்காரன். அந்த பாங்கிலே என் அஞ்சு பத்து ரூபா என்ன மாத்திரம் ? வெக்கம், அவமானம். அந்த அவமானத்துக்கு இந்த ரீடிங் ரூம் அவமானம் பெரிசில்லை. ஆனா இந்த ஆள்தான் பாங்க் பாலன்ஸ் ஷீட்டை விடாம படிச்சிண்டே இருக்கான். இவனுக்கு இந்த எண்ணெல்லாம் அர்த்தம் ஆகணும். சீக்கிரம் படிச்சுத் தொலைச்சாத் தேவலை. இங்கேந்து ஏழு அம்பதுக்குக் கிளம்பினாக்கூட எட்டு பதிமூணுக்கு டைம் கீப்பர் கேட் கிட்டே போயிடலாம். இந்தச் சனியன் பேப்பர் படிக்காமயே போயிருக்கலாம். போயிருந்தா அப்பவே போயிருக்கணும். இவ்வளவு நேரம் இவன் பக்கத்திலேயே இந்தத் தாளைப் பிடிச்சுண்டு உக்காந்துண்டு சுவரிலே இருக்கிற வாக்கியங்களை எல்லாம் படிச்சிருக்க வேண்டாம். இந்த மகா மகா வாக்கியங்களைக் குழந்தைகளே படிச்சுண்டு இருக்கட்டும். குழந்தைகளால்தான் இதைப் படிச்சுட்டு வயறெறியாம இருக்கமுடியும். தர்மம் பண்ணறவங்க இந்தப் போதனைகள் பண்ணாம இருந்தாத் தேவலை. ஆனா ஒத்தன் தர்மம் பண்ணறதே அவன் போதனை பண்ணறதுக்கு ஒரு வாய்ப்புன்னுதானே.
இப்போது அவன் அந்தக் கிழவர் படித்துக் கொண்டிருந்த தாளைச் சிறிது உறுதியாகவே பிடித்தான்.
இது விடாது போலேயிருக்கு. பாலன்ஸ் ஷீட்டுக்கு மேலே இருக்கறதைத்தான் எத்தனை தடவை படிக்கறது ? நாலு டெண்டர் நோட்டாஸ். இரண்டு சங்கீத சபா விளம்பரம். நடுவிலே கால் பத்தி செய்தி. என்ன செய்தி ? 'சோவியத் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்யும் என்று நேடோ கருதவில்லை. ' பக்கத்திலேயே 'எம். ஐ. ஆர். வி. எஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்த ரஷ்யா தயார். ' இந்த எம். ஐ. ஆர். வி. எஸ்.னா என்ன ? அதெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு நேரம் எங்கே இருக்கு ? இந்த ஆளுக்கு தெரிஞ்சிருக்கலாம். நான் இங்கே வர நாளெல்லாம் இவனும் வரான். நான் வராத நாளெல்லாம் கூட வருவான். வந்து இப்படி ஒரு எழுத்து விடாம. படிச்சுத் தீர்ப்பான். இதெல்லாம் படிக்கறது இவன் தலையெழுத்து. இவன் தலையிலே இருக்கிற மயிரெல்லாம் நரைச்ச மயிர். இவன் காதிலேயும் மயிர் நிறைய முளைச்சிருக்கு. அந்த மயிர் கறுப்பாயிருக்கு. இவன் புருவ மயிர் எப்படி இருக்கும் ? இவன் கண்ணையே பாக்க முடியலையே ? அப்படித் தலையைக் குனிஞ்சிண்டு படிக்கறான். கன்னம் ஒட்டித்தான் கிடக்கு. நேத்திக்குச் சோறு சாப்பிட்டானோ என்னவோ ? எவ்வளவோ நாள் சாப்பிடாமக் கிடந்தாத்தான் இப்படி ஒட்டிப் போக முடியும். இல்லை, பெரிய சீக்காளியா இருக்கணும். இல்லை இரண்டுமா இருக்கணும். இவனுக்கு என்ன சீக்கு இருக்கும் ? பொண் சீக்கு இருக்கறதுக்கு நியாயமில்லை. பித்தம், காசம், ஹெர்னியா, டயாபிடாஸ், ரத்தக் கொதிப்பு, மயக்கம். நேத்திராத்திரி அது ஏதோ ஜாஸ்தியாப்போய் சாப்பிடாம படுத்திருப்பான். வெறும் வயத்திலே படுத்துண்டதனாலே தூக்கம் கண்டிருக்காது விடிஞ்சதும் விடியாததுமா இங்கே வந்துடறான். நான் மட்டும் என்ன பண்ணறேன் ? அவனும் என்னைப் பத்தி அப்படித்தான் நினைச்சிண்டிருக்கணும் இந்த மாதிரி இந்த ஊர்லே இருக்கிற ஆயிரம் ரீடிங் ரூமிலேயும் ஆயிரக்கணக்கான பேர் இப்படித்தான் ஆயிரக்கணக்கானப் பேரைப் பத்தி நினைச்சிண்டிருப்பாங்க. மத்தவங்களைப் பத்தியும் நினைக்க முடியுமா இந்தக் காலத்திலே ? எனக்குத் தோணலை. ஒரு ஆளைப் பத்தி நினைக்கிறதுக்கு கூட மனசிலே ஒரு அமைதி இருக்கணும். ஒரு உற்சாகம் இருக்கணும். இங்கே எவன் மூஞ்சியைப் பாத்தா உற்சாகமா இருக்கிற மாதிரி இருக்கு ? எல்லார் மூஞ்சியிலேயும் சோர்வு, ஏக்கம், நாள் முழுக்க முழுக்க ஏதேதோ காரணங்களுக்காக மனம் நொந்து போய், அந்தத் தனித்தனி காரணங்களெல்லாம் ராத்திரி தூக்கம் என்கிற ரசாயனத்திலே அப்படியே பாகாப் போய், மூஞ்சியிலேயும் முதுகிலேயும் இறுகிப் போய்க் கிடக்கு. ஒத்தன் மூஞ்சி தெளிவாயில்லே. ஒத்தன் முதுகு நேராயில்லை. இவுங்க எல்லாம் விவரம் தெரிஞ்சவங்க. இந்த மண்லே விவரம் தெரிஞ்சவங்க எவனும் கூனிக் குறுகாம இருக்க முடியலை. ஏதோ தடால் புடால்னு கார்லே ஸ்கூட்டர்லே போறவங்களைப் பாத்தாக் கூட இந்தக் கூனிக் குறுகல் தெரியறது. இவ்வளவு பெரிய பாலன்ஸ் ஷீட்டைப் பக்கத்திலே பாதி அடைச்சுக்கிற மாதிரி அச்சிட்டுக் காண்பிச்சாக்கூட இந்தக் கூனிக் குறுகல் தெரியறது. இது நோய் நொடினாலே இருக்கணும், இல்லே, அயோக்யத்தனத்தாலே இருக்கணும். இந்த மண்ணிலே இன்னிக்கு இருக்கிறவங்க எல்லாம் ஒண்ணு நோயாளிங்க, இல்லேன்னா அயோக்யங்க. இந்தப் பாரத புண்ய பூமி---- அதோ அந்த ஆணியிலே பாரத புண்ய பூமி பத்தி பெரிய பாட்டு அட்டையிலே குழந்தைகளுக்காக தொங்கறது ---- பாரத புண்ய பூமி. பாரதியார் பாடிட்டுப் போயிட்டார். டி. கே. பட்டம்மாள் ரிகார்டு போட்டா. இப்போ குழந்தைகள் பாடறது. பாடறதுன்னுதான் நினைக்கிறேன். இந்த ரூம்லேயே இன்னும் அரை மணி கழிச்சுக் குழந்தைகள் பாடும். பாரத புண்ய பூமி. இந்த ரீடிங் ரூம் பாரத புண்ய பூமிதான். வெளியிலே போல உள்ளேயும் பெருக்காத குப்பை நிறையக் குவிஞ்சு கிடக்கு. இங்கே குழந்தைகளும் ஒண்ணு இரண்டு சொல்லும். கிழவங்களும் பத்து இலக்க எண், பன்னெண்டு இலக்க எண் படிப்பாங்க. சுவர்லே நிறைய போதனைகள். இந்தக் கிழவன்கிட்டே இந்தத் தாளுக்காகக் காத்திருக்கிறதுக்குச் சுவரிலே போய் முட்டிக்கலாம். சுவர்லே முட்டிண்டா உடனே சுவர் எல்லாம் பாட ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடும். என்ன பாட்டு ? பாரத புண்ய பூமி. சீ ' இவ்வளவு கசப்பா எனக்குள்ளே அடைஞ்சு கிடக்கு ? பாவம், பாரதம் என்ன பண்ணும், பூமி என்ன பண்ணும் ? ஆனா ஏன் இவ்வளவு கசப்பு ? எனக்கு மட்டுந்தானா கசப்பு ? லட்சக்கணக்கான பேர், கோடிக் கணக்கான பேர் கிட்டே இந்தக் கசப்பு இல்லை ? இப்ப எப்படி லட்சம், கோடி யெல்லாம் அர்த்தம் ஆறது ? அவுங்க மனுஷங்கன்ற காரணத்தினாலா ? மனுஷங்களை வெறும் எண் மாதிரி ஒதுக்கிவிட முடியுமா ? அதனாலேதான் இந்த ஆள் இப்படிக் கால் மணியா இந்த ஒரே தாளை, அதுவும் இந்த பாங்க் பாலன்ஸ் ஷீட் இருக்கிற தாளைப் படிச்சிண்டு இருக்கிறப்போ விடுடா அதைன்னு சொல்லிப் பிடுங்க முடியாம இருக்கா ? இவன் சட்டையைத் தோச்சு வாரக் கணக்கிலே ஆயிருக்கணும். காலர் கிட்டே அழுக்கு அப்படியே வண்டி மசையாப் பதிஞ்சு போயிடுத்து. இவனுக்கு குடும்பம் பெண்சாதி யாரும் கிடையாதோ ? இவனே இந்தச் சட்டையைத் தோய்க்கிறதுன்னா மணிக் கணக்கிலே தோய்க்கணும். அப்ப கூடப் பெரிசா இந்தக் கழுத்து மசைமாறிடப் போறதில்லை. எங்கெங்கேயோ விழுந்திருக்கிற மூக்குப்பொடிச் சளிக் கறை போயிடப்போறதில்லை. இவன் ஒழுங்காச் சவரம் பண்ணிண்டா இவன் முகம் அழகாகக் கூட இருக்கலாம். ஒரு காலத்திலே ரொம்ப அழகாக இருந்திருக்க வேண்டிய முகந்தான். இவனுக்கு விவரம் தெரிஞ்சு முப்பது வருஷம், நாப்பது வருஷம் வாழ்ந்து இடிபாடுகள் பட்டு, யார் யாரையோ கெஞ்சு, எது எதுக்காகவோ கதறி, அழுது, பொருமி, ஆத்திரத்தை யடக்கி, இழிவுபட்டு, நோய்வாய்ப்பட்டு, உதவி இல்லாம, ஒத்தாசை இல்லாம, பராமரிப்பு இல்லாம, சரியாச் சாப்பாடு இல்லாம, நாளை பத்தி ஒரு நிச்சயமில்லாம, நிச்சயமில்லாததுனாலே பயம் கொண்டு, பீதி கொண்டு, வெறுப்பு கொண்டு, கசப்பு கொண்டு, கண்ணைத் திறந்து வெளியிலே பாத்தா பட்டினியும் வேதனையும் குரூரமும் நிர்தாட்சண்யமும் அவலமும் அயோக்யத்தனமும் பீக் காகிதத்தைக் குழந்தைகள் பொறுக்கிக் கால் வயிறு ரொப்பிக் கொள்ள வேண்டிய அநியாயமும் காணச் சகிக்காம, இவனாலே ஒண்ணும் பண்ணமுடியாம, சாகறதுக்கும் தைரியமில்லாம, சாராயம் குடிச்சும் நினைவு தவறிக் கிடக்கக் காசில்லாம, இங்கே வந்து, இந்த ரீடிங்ரூமிலே வந்து எவனோ கொட்டிச் சேர்த்துக் கொம்மாளம் அடிக்கிற பணத்தைக் கணக்கு பாத்து, இவன் கற்பனையும் பண்ணிப்பாக்க முடியாத எண்களைக் கண் வழியா மூளையிலே போதையேத்திண்டு மயங்கிக் கிடக்கான். இந்தப் போதை கூட இவனுக்குக் கிடைக்க வழியில்லைன்னா இவன் என்னாவான் ? இவன் போதையிலே மயங்கிக் கிடக்கட்டும். தாராளமாகக் கிடக்கட்டும். தாராளமாகக் கிடக்கட்டும். இந்தப் போதை ஒண்ணுதான் இவனுக்கும் இவன் மாதிரி இருக்கிற கோடிக்கணக்கானவங்களுக்கும் இன்னிக்குக் கிடைக்கக் கூடியது. நான் கூட இந்தப் போதைக்குத் தான் இங்கே வருகிறேனோ ?
மணி ஏழு ஐம்பைத்தைந்து ஆனதில் அவன் தாங்க முடியாத அவசரத்தில் அவன் பக்கத்தில் உட்கார்ந்து குனிந்தபடி படித்துக் கொண்டிருந்த கிழவர் கையிலிருந்து அந்தத் தாளைச் சிறிது உறுதியாகப் பிடித்து உருவினான். முந்தின இரவு உண்ணாமல் படுத்திருக்கக் கூடியவர், அல்லது அப்படிப் பல நாள் உண்ணாமல் இருந்திருக்கக் கூடியவர், பலநாள் சவரம் செய்யாத முகமுடையவர், அழுக்கு மசையாகப் பதிந்து போய்விடும் அழுக்குச் சட்டை உடுக்க வேண்டியவர், பித்தம் காசம்--டயாபிடாஸ்-ரத்தக்கொதிப்பு அவதிக்குள்ளாகியிருக்கக் கூடியவர், தன்னுடைய நீண்ட வாழ்வின் சோகத் துயர இழிவுகளை மறக்கப் பிரமாண்டமான எண்களைப் படித்துப் போதையேற்றிக் கொள்ளவேண்டியவர் சிறிது நேரம் முன்பாகவோ அல்லது வெகு நேரமாகவோ தூங்கிக் கொண்டிருக்க வேண்டும். அந்தத் தாள் அவன் கையுடன் வந்து விட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக